செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

இசைக் கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க முடியாது- ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

Published On 2020-08-11 02:31 GMT   |   Update On 2020-08-11 02:31 GMT
இசைக் கலைஞர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை:

திருக்கோவில்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மங்கள இசைக்கருவிகளை வாசிக்கும் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளது போல, வாத்திய இசைக் கலைஞர்களுக்கும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும் தனியாக நலவாரியம் அமைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கிற்கு, தமிழக சுற்றுலா, கலாச்சாரத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

இசைக்கருவிகளை இசைக் கும் பாரம்பரிய கலைஞர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தரப்படுகிறது. மார்கழி மற்றும் அரசு, தியாகராஜர் ஆராதனை விழாக்கள் உள்ளிட்ட விழாக்களில் அவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையில் இந்த கலைஞர்களுக்கு நிரந்தர சம்பளத்தில் பணி நியமனம் தரப்படுகிறது.

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் 35 ஆயிரம் 385 கலைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்தினருக்கும் பல்வேறு நிதி உதவி திட்டங்கள் உள்ளன. விபத்து நிவாரணம், குழந்தைகளுக்கான கல்வி உதவி, மகப்பேறு நிதி, திருமண உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் 58 வயதை கடந்தவுடன் அவர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 24 ஆயிரம் 736 பேருக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது நிவாரண தொகையாக ரூ.1000 ஜூன் மாதம் 26-ந்தேதி 24 ஆயிரத்து 656 பேருக்கு தரப்பட்டுள்ளது.

அரிதான இசை வாத்தியங்களான சாக்ஸாபோன், மாண்டலின், வீணை, புல்லாங்குழல் போன்றவற்றை இசைப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால் இவர்களுக்காக தனி நல வாரியம் அமைக்க முடியாது. தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நாதஸ்வரம், தவில், கிளாரினெட், மிருதங்கம், தாள இசைக்கலைஞர்கள், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர எந்த தடையும் இல்லை. அதனால், இவர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைக்க முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
Tags:    

Similar News