செய்திகள்
மது விற்பனை

முழு ஊரடங்கால் குமரியில் ஒரே நாளில் ரூ.5¼ கோடிக்கு மது விற்பனை

Published On 2020-08-10 10:05 GMT   |   Update On 2020-08-10 10:05 GMT
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.5 கோடியே 25 லட்சத்துக்கு மதுவிற்பனை நடைபெற்று இருப்பதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறினார்.
நாகர்கோவில்:

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்டதால், நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5¼ கோடிக்கு மது விற்பனையானது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்று முன்தினமே வாங்கி வைத்துக்கொண்டனர். பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் ஆண்கள் இறைச்சி மற்றும் மது அருந்தி நண்பர்களுடன் கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆனால் தொடர்ந்து 6 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் அன்றைய தினம் மதுக்கடைகளும் மூடப்பட்டன. எனவே மதுக்கடைகளில் சனிக்கிழமைகளில் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதே போல நேற்று முன்தினமும் குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

இதன் மூலம் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.5 கோடியே 25 லட்சத்துக்கு மதுவிற்பனை நடைபெற்று இருப்பதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் வழக்கமான நாட்களில் சுமார் ரூ.3 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும். தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் சனிக்கிழமைகளில் மதுவிற்பனை அதிகமாக உள்ளது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமையன்று ரூ.5 கோடியே 25 லட்சத்துக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது“ என்றார். 
Tags:    

Similar News