செய்திகள்
நவாஸ், பர்கத்

கார் டிரைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு- கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2020-08-09 08:42 GMT   |   Update On 2020-08-09 08:42 GMT
கார் டிரைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர்:

ஓசூர் அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் கலாம்பாஷா (வயது 42). கார் டிரைவர். கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி இரவு, அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கலாம்பாஷாவிடம் தகராறு செய்து, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவை சேதமடைந்ததுடன் தீப்பிடித்தது.

மேலும் மர்மநபர்கள் தங்களிடம் இருந்த கத்தியால், கலாம்பாஷாவின் தலையில் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் ஓசூர் சானசந்திரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காலனியை சேர்ந்த நவாஸ் (33), ஒடிசா மாநிலம், வாசுதேவ்பூர் அடுத்த நுகார்டா பகுதியை சேர்ந்த சர்ஜித் மாலிக் என்கிற பாபு (25), அலசநத்தம் அரசு பள்ளி பின்புறம் வசித்து வரும் பர்கத் (27) ஆகியோர் கலாம்பாஷா வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதில் நவாஸ், பர்கத் ஆகிய 2 பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், நவாஸ், பர்கத் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News