செய்திகள்
மது விற்பனை

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை

Published On 2020-08-09 06:11 GMT   |   Update On 2020-08-09 06:11 GMT
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
சென்னை:

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள், ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டுமே இயங்குவதற்கு இன்றைய தினம் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர்த்து மற்ற சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரித்து உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கும், திருச்சியில் - ரூ.41.67 கோடி, சேலத்தில் - ரூ.41.20 கோடி, கோவையில் - ரூ.39.45 கோடி, சென்னையில் - ரூ.22.56 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.

கடந்தவார சனிக்கிழமையை விட இந்தவாரம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  கடந்த வாரம் ரூ.188.86 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.189.38 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News