செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-08-07 04:20 GMT   |   Update On 2020-08-07 04:20 GMT
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை:

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கோடை விடுமுறை கடந்தும், பள்ளிகளின் விடுமுறை நீண்டுகொண்டே செல்கிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் சிகிச்சை மையமாகவும், தனிமைப்படுத்தும் மையமாகவும் சில பள்ளிகள் மாற்றப்பட்டு உள்ளன.

இதற்கிடையே மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக தகவல் பரவியது. இந்த தகவலுக்கு பள்ளி கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

‘தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது. சூழ்நிலை சரியானதும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்’ என்று பள்ளிக்கல்வித்துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.

கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Tags:    

Similar News