செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய காட்சி.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1,550 கோடி கடனுதவி - முதல்-அமைச்சர் தகவல்

Published On 2020-08-06 23:45 GMT   |   Update On 2020-08-06 23:45 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1,550 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 5-ந்தேதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆகும். அதில், குணமடைந்தவர்கள் 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 பேர். இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 461. மாநிலம் முழுவதும் இதுவரை 28 லட்சத்து 45 ஆயிரத்து 406 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. 60 அரசு மையங்களும், 65 தனியார் மையங்கள் என மொத்தம் 125 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 43 ஆயிரத்து 578 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை 3 ஆயிரத்து 202 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 2 ஆயிரத்து 603 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 59 பேர் இறந்துள்ளனர். கொரோனாவுக்கு சிசிச்சை அளிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 1,200-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட மையங்கள் தயாராக உள்ளன.

இதேபோல் மருத்துவர்களும் தேவையான அளவு இருக்கின்றனர். எனவே, கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு மருத்துவ கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். நானே நேரில் வந்து மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினேன். ரூ.327 கோடி செலவில் மருத்துவ கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. மேலும் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கட்டிடம் ஏற்படுத்தப்பட்டது.

ஏழை மக்களின் பிரச்சினைகளை அரசே நேரில் கேட்கும் வகையில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 165 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 7 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. குஜிலியம்பாறையை தலைமையிடமாக கொண்டு தனித்தாலுகா உருவாக்கப்பட்டது. கொடைக்கானலில் ஏழை மக்கள் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்கும் வகையில் புதிய கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.

இதைத்தவிர மாவட்டத்தில் இதுவரை மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1,550 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 7 ஆயிரத்து 350 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா காலத்தில் மக்களின் சிரமத்தை போக்குவதற்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன.

மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கிய அரிசியும் வழங்கப்படுகிறது. அந்த அரிசி, நவம்பர் மாதம் வரை வழங்கப்படும். ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1,000, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்-பொள்ளாச்சி இடையே 117 கி.மீ. தூரம் ரூ.672 கோடியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை, திண்டுக்கல் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News