செய்திகள்
அரை நிர்வாணத்துடன் மனு கொடுக்க வந்த ஓட்டுனர்களை படத்தில் காணலாம்.

வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் அரை நிர்வாணமாக வந்து மனு கொடுத்த ஓட்டுனர்கள்

Published On 2020-08-06 09:16 GMT   |   Update On 2020-08-06 09:16 GMT
திருப்பூரில் சுற்றுலா வாகன ஓட்டுனர் கூட்டமைப்பினர் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் அரைநிர்வாணத்துடன் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதனால் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கடந்த 4 மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கூட்டமைப்பை சேர்ந்த திருப்பூர் மாவட்ட ஓட்டுனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சிறுபூலுவபட்டியில் உள்ள திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அப்போது “இ-பாஸ் முறையை ரத்து செய்க” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி வந்திருந்தனர். அதில் சிலர் திடீரென சட்டையை கழட்டி அரை நிர்வாணத்துடன் மனு கொடுப்பதற்கு செல்ல முயற்சி செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

பின்னர் ஒருசிலர் மட்டும் வட்டார போக்குவரத்து அதிகாரி குமாரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கின் காரணமாக மோட்டார் வாகனத் தொழில் முற்றிலும் முடங்கி போய் உள்ளதால் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். காப்பீட்டு முடிவு தேதியை நீடிக்க வேண்டும். சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகை அறிவிக்க வேண்டும். 

சுற்றுலாத்துறை அனைத்தும் திறக்கப்படும் வரை சுற்றுலா வாகனங்களுக்கு மற்றும் ஓட்டுனர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஓட்டுனர்கள் மீது பொய் வழக்குகளை பதியக் கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட வட்டார போக்குவரத்து அதிகாரி குமார் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News