செய்திகள்
திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன்

திருப்போரூர் திமுக எம்எல்ஏ தோட்டா தொழிற்சாலை நடத்தினார்- ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

Published On 2020-08-06 02:04 GMT   |   Update On 2020-08-06 02:04 GMT
துப்பாக்கி சூடு வழக்கில் கைதான திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன், சட்டவிரோதமாக தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையை பண்ணை வீட்டில் நடத்தியதாக சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருக்கும், குமார் என்பவருக்கும் கடந்த மாதம் 11-ந்தேதி நிலத்தகராறில் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் சீனிவாசன் என்பவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதயவர்மன் உள்பட இரு தரப்பையும் சேர்ந்தவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட 11 பேர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி தன்வாதத்தில் கூறியதாவது:-

சம்பவத்தன்று இதயவர்மன் தன் கைத்துப்பாக்கியால் குமாரை நோக்கி சுட்டார். அவர் தப்பியோடியதும் கூட்டத்தை நோக்கி ரைபிள் துப்பாக்கியால் சுட்டார். இந்த இரண்டு வகையான துப்பாக்கிகளுக்குரிய உரிமம் 2019-ம் ஆண்டுடன் முடிந்து விட்டது. காலாவதியான உரிமத்துடன் இந்த துப்பாக்கிகளை அவர் வைத்துள்ளார். உரிமம் இல்லாத மற்றொரு துப்பாக்கியும் அவரிடம் இருந்தது.

இதயவர்மன் துப்பாக்கிகளுக்கு தோட்டாக்களை சட்டவிரோதமாக தயாரித்துள்ளதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து இதற்கான மூலப்பொருட்களையும், தோட்டாக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். தோட்டாக்கள் தயாரிக்கும் சட்டவிரோத தொழிற்சாலையை பண்ணை வீட்டில் அவர் நடத்தியுள்ளார்.

போலீஸ் புலன்விசாரணைக்கு எம்.எல்.ஏ. இதயவர்மன் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை. இந்த வழக்கில் துப்பாக்கிகள் எங்கிருந்து வந்தது? என்பதை கண்டறிய வேண்டியுள்ளது.

மனுதாரருக்கு தடை செய்யப்பட்ட மற்றும் சமூக விரோத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தவேண்டியுள்ளது. எனவே மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கு விசாரணை விவர ஆவணத்தை (சி.டி.பைலை) தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Tags:    

Similar News