செய்திகள்
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயாஸ்கர்

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா உயிரிழப்பை மேலும் குறைக்க முடியும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-08-05 20:11 GMT   |   Update On 2020-08-05 20:11 GMT
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் உயிரிழப்பை மேலும் குறைக்க முடியும் என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து செல்ல ரூ.80 லட்சம் மதிப்புள்ள வாகனம் மற்றும் மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயாஸ்கர் வழங்கினார். பின்னர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரக்கூடிய கொரோனா சிகிச்சை பிரிவை ஆய்வு செய்தார். இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்கனவே ஆயிரம் படுக்கைகளுடன் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் எதிர்வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கு மேலும் கூடுதலாக ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 374 கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் காணொலி காட்சி மூலம் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கப்பட்டதன் பேரில் இதுவரை 25 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக 750 டாக்டர்கள் பிரத்யேகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசால் நோய் தொற்று எற்பட்டு, அதனால் நுரையீரல் பாதிப்படைந்து ஏற்படும் மரணம் என்பது தினமும் 10-க்கும் குறைவாக தான் இருக்கிறது. மற்ற மரணங்கள் எல்லாமே, பிற நோய்களால் பாதிக்கப்பட்டு, அதனுடன் கொரோனா தொற்றும் ஏற்பட்டதால் நிகழ்ந்தது.

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் இந்த உயிரிழப்புகளை மேலும் குறைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது அரசு மருத்துவமனை ‘டீன்’கள் டாக்டர்கள் தேரணிராஜன், பாலாஜி, வசந்தாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News