செய்திகள்
முத்துக்குமார்

கொரோனா சிகிச்சை மையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-08-05 09:53 GMT   |   Update On 2020-08-05 09:53 GMT
புளியங்குடியில் கொரோனா சிகிச்சை மையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புளியங்குடி:

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க புளியங்குடி மற்றும் வாசுதேவநல்லூரில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சேர்ந்தமரம் அருகே உள்ள வீரசிகாமணியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் முத்துக்குமார் (வயது 27) என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 28-ந்தேதி அன்று புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அவருக்கு தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தார். இந்த நிலையில் அவர் முகாமில் தங்கியிருந்த அறையில் நேற்று காலை திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், மருத்துவ அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா பயம் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, வாசுதேவநல்லூரில் கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கியிருந்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் தற்கொலை 
செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News