செய்திகள்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கொரோனா தொற்று விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது - அமைச்சர்கள் கூட்டாக பேட்டி

Published On 2020-08-03 20:50 GMT   |   Update On 2020-08-03 20:50 GMT
அனைத்து துறையினரும் இணைந்து செயல்படுவதால் தான் கொரோனா நோய் தொற்று, விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்தனர்.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கொரோனா வைரசை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். மேலும் வரும் காலங்களில் செய்யப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் உத்தரவின் பெயரில் கொரோனா வைரசை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அதிகாரிகளின் கூட்டு முயற்சி காரணமாக தற்போது பாதிப்பு குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்து வருகிறது என்பதே சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. கொரோனா தடுப்பு பணிகள் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘மைக்ரோ திட்டம்’ சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதால், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரசின் பாதிப்பு இன்னும் வேகமாக குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, பணியின்போது உயிரிழந்த அனைத்து பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிச்சயம் முதல்-அமைச்சர் அறிவித்த நிவாரண உதவிகளை வழங்குவார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) கணிப்பின் அடிப்படையிலும், தமிழக அரசின் நோய் தடுப்பு வியூகம் காரணமாகவும், கொரோனா வைரஸ் பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு மிக குறைவாக பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஆளாகிவரும் வளர்ந்த நாடுகளில்கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்துதர முடியாத சூழலில், சென்னையில் தற்போதைய நிலவரப்படி 40 சதவீதம் அளவுக்கு கொரோனா சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் காலியாக உள்ளது.

இந்தியாவிலேயே அதிகபடியாக 7½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது சென்னையில் தான். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டதால் தான் விரைவாக நோய் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உரிய காரணங்கள் இருந்தால் ‘இ-பாஸ்’ கட்டாயம் வழங்கப்படும். மேலும் தற்போது இணையவழி மூலம் ‘இ-பாஸ்’ வழங்குவதில் இருந்த சிக்கல் கள் நீக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1 லட்சத்து 89 ஆயிரம் ‘இ-பாஸ்’ வழங்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா தடுப்பு பணியில் 3 லட்சத்துக் கும் மேற்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 
Tags:    

Similar News