செய்திகள்
மாற்றுத்திறனாளி மகனுடன் தவித்த பெண்ணுக்கு பெட்டிக்கடை

மாற்றுத்திறனாளி மகனுடன் தவித்த பெண்ணுக்கு பெட்டிக்கடை- கலெக்டர் நடவடிக்கை

Published On 2020-08-03 09:37 GMT   |   Update On 2020-08-03 09:51 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக தன் மாற்றுத்திறனாளி மகனுடன் தவித்து வந்த பெண்ணிற்கு மாவட்ட கலெக்டரின் உத்தரவால் பெட்டிக்கடை வைத்து கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அலங்காநல்லூர்:

அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(வயது 36). கணவரால் கைவிடப்பட்டவர். இவரது மகன் கார்த்திகேயன்(14) மாற்றுத்திறனாளி. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றி வீட்டு வாடகை கூட தர இயலாத சூழ்நிலையில் சிரமப்பட்டு வந்த பெண்ணை பற்றி சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன. இதையறிந்த சமூக ஆர்வலர்கள் ஒரு சில உதவிகளை செய்து வந்தனர். இந்தநிலையில் இவரது குடும்ப நிலைமை குறித்து மாவட்ட கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதைதொடர்ந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளைத்தலைவர் மற்றும் மாவட்ட கலெக்ட வினய் உத்தரவின்பேரில் அந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு பெட்டிக்கடை வைத்து கொடுக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியினை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் வழங்கி இருந்தனர். இந்த பெட்டிக்கடை வழங்கும் நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தாசில்தார் பழனிகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி குழுவினர் மற்றும் அலங்காநல்லூர் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் உடனிருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தன் மாற்றுத்திறனாளி மகனுடன் தவித்து வந்த பெண்ணிற்கு மாவட்ட கலெக்டரின் உத்தரவால் பெட்டிக்கடை வைத்து கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News