செய்திகள்
முக ஸ்டாலின்

இன்னல் தரும் கல்வி கொள்கை எதிர்ப்பில் வென்று காட்டுவோம் - முக ஸ்டாலின் கடிதம்

Published On 2020-08-01 16:36 GMT   |   Update On 2020-08-01 16:36 GMT
இடஒதுக்கீடு வழக்கைப் போல இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்த அறிவிப்பிற்கு, தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

உண்மையான தேசத் தலைவர்கள் பலரும் மதித்துப் போற்றிய இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கும் நோக்கில் மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறது.

ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.

வெற்றிகரமாக செயல்பட்டு வரும் 10+2 என்கிற நடைமுறைக்கு மாறாக 5+3+3+4 என்கிற மாற்றம் மாணவர்கள் மீது நடத்தப்படுகின்ற உளவியல் ரீதியான தாக்குதலாகும்.

புதிய கல்வி கொள்கை குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்பில் எந்த தெளிவான அறிக்கையும் தற்போதுவரை வெளியாகவில்லை.

இந்திய மாணவர்களின் நலன் கருதி இடஒதுக்கீடு வழக்கைப் போல இன்னல் தரும் கல்விக்  கொள்கை எதிர்ப்பிலும் வெற்றி பெற்று சமூக நீதி காத்து சமத்துவ கல்வியை வளர்ப்போம்.

மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத பிற மாநில முதல்வர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு இந்திய மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் திமுக தொடர்ந்து மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News