செய்திகள்
கோப்புபடம்

பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு - பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு

Published On 2020-08-01 10:49 GMT   |   Update On 2020-08-01 10:49 GMT
பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கூறினார்.
விழுப்புரம்:

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிளஸ்-1 தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.75 சதவீதம் தேர்ச்சி உயர்ந்துள்ளது. 10 அரசு பள்ளிகள் உள்பட 76 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் அதிகளவில் அரசு பள்ளிகள் விழுப்புரம் மாவட்டத்தில்தான் உள்ளது. இங்கு 180 அரசு பள்ளிகள் உள்ளன.

வரும் கல்வியாண்டில் இன்னும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். அதேநேரத்தில் குறைவான தேர்ச்சி கொடுத்த பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும்.

கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க காலை, மாலையும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு பாடமும் முடிந்ததும் குறுந்தேர்வு நடத்தப்படும். அதுமட்டுமின்றி மாதந்தோறும் மாவட்ட அளவில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். இதுதவிர காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் முடிந்ததும் மாணவ- மாணவிகளின் விடைத்தாள்களை அந்தந்த கல்வி மாவட்ட ஆசிரியர்கள் மூலம் திருத்துவதற்கு பதிலாக வேறு கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு திருத்தும் பணிகள் நடைபெறும். பள்ளிகளுக்கு மாணவர்கள் சரிவர வரவில்லையெனில் அவர்களது பெற்றோருக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும். பள்ளிகள் திறந்தவுடன் இடைவெளி இல்லாமல் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும். நம்மிடம் படிக்கும் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற மனநிலை ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். தேர்ச்சி விகிதத்தை உயர்த்தாத ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கான முறையில் பள்ளிக்கு வந்தனரா? பள்ளிக்கு வந்திருந்தும் தேர்ச்சி பெறவில்லையா? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். 15 நாட்களுக்கு ஒருமுறை வட்டார அளவில் ஆசிரியர்களை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு மாணவ- மாணவிகளின் கல்வித்தரம் குறித்து எடுத்துரைக்கப்படும். ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்களை அழைத்து அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி தகுந்த அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படும். பள்ளிகள் திறந்ததும் இந்த கலந்தாய்வு தொடரும்.

வரும் கல்வியாண்டு முதல் விழுப்புரம் மாவட்டம் கல்வியில் முன்னேற்ற பாதையில் செல்ல பள்ளிக்கல்வித்துறை மூலம் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும். ஆசிரியர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News