செய்திகள்
கோப்புபடம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 96.2 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

Published On 2020-08-01 07:07 GMT   |   Update On 2020-08-01 07:07 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் 96.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல்:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-1 தேர்வு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 9 ஆயிரத்து 849 மாணவர்கள், 11 ஆயிரத்து 158 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 7 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதினர். இதற்கிடையே நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதில் 9 ஆயிரத்து 319 மாணவர்கள், 10 ஆயிரத்து 889 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 208 பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும் மாணவர்கள் 94.62 சதவீதமும், மாணவிகள் 97.59 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். அதிலும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 96.2 சதவீதம் ஆனது. அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் 93.10 சதவீதமும், தனியார் பள்ளிகளின் மாணவர்கள் 99.39 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் 97.92 சதவீதமும் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

இதுதவிர அறிவியல் பிரிவு மாணவர்கள் 97.01 சதவீதமும், வணிகவியல் பிரிவு மாணவர்கள் 95.88 சதவீதமும், கலைப்பிரிவு மாணவர்கள் 94.45 சதவீதமும் தேர்ச்சி பெற்று இருந்தனர். 

மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுத்தவரை பார்வையற்றவர்கள் 5 பேர், காதுகேளாதவர்கள் 5 பேர், இதர மாற்றுத்திறனாளிகள் 37 பேர் என மொத்தம் 47 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். அதில் 43 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதற்கிடையே பிளஸ்-1 தேர்வு முடிவுகளை அறியும் ஆவலில் மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு வந்தனர். பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்பட்ட தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்த்தனர். ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வழக்கமான பரபரப்பை பள்ளிகளில் காணமுடியவில்லை.
Tags:    

Similar News