செய்திகள்
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

3-ம் தேதி முதல் தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-07-30 12:15 GMT   |   Update On 2020-07-30 12:15 GMT
வரும் திங்கட்கிழமை (3-ம் தேதி) முதல் தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கடந்த மார்ச் 25-ந் தேதி நாடுதழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தொற்று குறைந்தபாடில்லை.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மாதந்தோறும் புதிய தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து வருகிறது. தற்போதைய ஊரடங்கு, நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

எனவே, ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட உள்ள மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

அதன்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதிவரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த பள்ளி கல்வியாண்டு ஜுன் மாதம் தொடங்க இருந்த நிலையில் கொரோனா நோய் பரவலால் பள்ளிகள் திறப்பு தள்ளிக்கொண்டே போகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளி திறப்பு பற்றி ஆலோசிக்கப்படும் எனவும், வரும் திங்கட்கிழமை முதல் தொலைக்காட்சி வாயிலாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மும்மொழி கொள்கை குறித்து இதுவரை முழுவடிவிலான அறிக்கை வெளிவரவில்லை. முழுமையான அறிக்கை வந்தவுடன் இது குறித்து முதலமைச்சர் உரிய ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.

இந்த கல்வியாண்டுக்கான பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து அரசு புதிய அட்டவணையை வெளியிடப்பட உள்ளதாகவும், இந்த கல்வியாண்டில் 20 லட்சம் மாணவ மாணவிகள் அரசு பள்ளிகளில் புதியதாக சேர உள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.
Tags:    

Similar News