செய்திகள்
டிடிவி தினகரன்

கடுமையான நடவடிக்கை இல்லை என்பதால் தொடரும் சிலை அவமதிப்பு -டிடிவி தினகரன் கண்டனம்

Published On 2020-07-30 10:35 GMT   |   Update On 2020-07-30 10:35 GMT
நச்சு செயலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே தொடரும் சிலை அவமதிப்பு சம்பவங்கள் காட்டுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டியும், காவிக்கொடியையும் கட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அண்ணா சிலை அவமதிக்கப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியார், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவச்  சிலைகளைத் தொடர்ந்து கன்னியாகுமாரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையும் காவிக்கொடியால் அவமதிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.  

இத்தகைய நச்சு செயலில் ஈடுபடுபவர்கள் மீது  அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே தொடரும் சிலை அவமதிப்பு சம்பவங்கள் காட்டுகின்றன. இல்லாவிட்டால் மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு இவ்வளவு துணிச்சல் இந்த விஷமிகளுக்கு எங்கிருந்து வரும்?

சமூக அமைதியைச்  சீர்குலைக்கும் இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News