செய்திகள்
விசாரணைக்கு ஆஜராவதற்காக வந்த மகேந்திரனின் உறவினர்கள், நண்பர்கள்

பேய்க்குளம் வாலிபர் உயிரிழந்த வழக்கு: உறவினர்-நண்பர்களிடம் சிபிசிஐடி விசாரணை

Published On 2020-07-29 10:58 GMT   |   Update On 2020-07-29 10:58 GMT
பேய்க்குளம் வாலிபர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உறவினர்கள், நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி:

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் வடிவு. இவருடைய மகன் மகேந்திரன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரை சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை விடுவித்த சில நாட்களில் மகேந்திரன் இறந்தார்.

இதையடுத்து போலீசார் தாக்கியதால்தான், தனது மகன் இறந்ததாகவும், தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடிவு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து வழக்கு ஆவணங்களை பெற்று கொண்ட சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி கே.வி.கே. நகரில் மகேந்திரனின் அக்காள் சந்தனமாரியின் வீட்டில் சென்று, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு மகேந்திரனின் தாயார் வடிவுவிடமும் விசாரித்தனர். பின்னர் பேய்க்குளம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் வைத்து, மகேந்திரனின் அண்ணன் துரை மற்றும் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து மகேந்திரனின் உறவினர்களான ராஜா, கண்ணன், நண்பர்களான மணி, மாடசாமி ஆகியோரை நேற்று தூத்துக்குடி சி.பி. சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வரவழைத்தனர். அங்கு அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
Tags:    

Similar News