செய்திகள்
கலாம் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் ஆளுநர்

5ம் ஆண்டு நினைவு நாள்- அப்துல் கலாமுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அஞ்சலி

Published On 2020-07-27 09:49 GMT   |   Update On 2020-07-27 09:49 GMT
டாக்டர் அப்துல் கலாமின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை:

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக காணெலி வாயிலாக டிஜிட்டல் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 

இந்நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலரஞ்சலி செலுத்தினார். அத்துடன், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டிஜிட்டல் அஞ்சலி நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். 

அப்போது, முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 5-வது நினைவேந்தலின் ஒரு பகுதியாக இங்கு இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும், ஒரு உன்னத ஆத்மாவின் மறைவுடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அர்த்தமுள்ள பயணம் நின்றுபோய்விட்டதாகவும் கூறினார். தேசமும் மனிதநேயமும் எப்போதும் தனித்துவமான மனிதரை இழக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கலாம் அவர்கள் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு ஆசிரியர் தினத்தன்று அளித்த பேட்டியில், ஒரு நல்ல ஆசிரியராக மக்கள் என்னை நினைவில் வைத்திருந்தால், அதுவே எனக்கு மிகப்பெரிய மரியாதை என்று கூறியதை ஆளுநர் நினைவு கூர்ந்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர், அறக்கட்டளை இணை நிறுவனர்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News