செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

விவசாயி மரணம்- சிபிசிஐடி விசாரணை கோரி மனு

Published On 2020-07-25 07:09 GMT   |   Update On 2020-07-25 09:01 GMT
தென்காசி அருகே வாகைகுளத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயி. இவர், தனது வீட்டின் அருகே உள்ள வயலில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் 5 பேர் அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்தநிலையில் அவர் இறந்து போனார்.

இதை அறிந்த அவரது உறவினர்கள், கடையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், இதுதொடர்பாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி  வாகைகுளத்தில் விவசாயி இறந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை கோரி  உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி அணைக்கரை முத்துவின் மனைவி முறையீடு செய்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது:

வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் விவசாயி உடலை மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News