செய்திகள்
திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி

கொரோனா பாதித்தவர்கள் சித்த மருத்துவத்தில் 5 நாட்களில் குணமடைகின்றனர்- கலெக்டர் தகவல்

Published On 2020-07-24 14:02 GMT   |   Update On 2020-07-24 14:02 GMT
கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சித்த மருத்துவம் வழங்கி பரிசோதனை செய்ததில் உடனடியாக 5 நாட்களிலேயே முழுமையாக குணமடைந்துள்ளனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள பாலாஜிசொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்புப்பணிகள் குறித்து ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டாரச் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், வருவாய்த்துறையினர், நகராட்சி அலுவலர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா வரவேற்றார்.

கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சித்த மருத்துவம் வழங்கி பரிசோதனை செய்ததில் உடனடியாக 5 நாட்களிலேயே முழுமையாக குணமடைந்துள்ளனர். இதுவரை டெல்லி சென்று வந்தவர்கள் என விவரம் சேகரித்தோம். அதைத்தொடர்ந்து சென்னை பகுதியில் இருந்து வந்தவர்களை கண்காணித்தோம்.

தற்போது நாம் செய்ய வேண்டியது; ஒரு பகுதியில் எத்தனை பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கணக்கெடுத்து, அதற்கேற்ப பரிசோதனையை அதிகப்படுத்தி, தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறோம். அப்படி செய்யும்போது நெகடிவ் களமாக மாற்ற, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இதுவரை 28 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதற்கு காரணம், அவர்கள் காலதாமதமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தது தான். பெரும்பாலானோர் மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகே வந்ததாக கூறப்படுகிறது. அதிலும் பலருக்கு சர்க்கரை நோய், இருதய நோய் உள்பட பல்வேறு நோய் தாக்கத்தால் தான் இறந்துள்ளனர். இனி, நாம் விழிப்போடு கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் அஜித்தா, செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் வசந்தி, தாசில்தார்கள், டாக்டர்கள் வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News