செய்திகள்
அமைச்சர் தங்கமணி

மின்சார கட்டண கணக்கீடு: கேரளா, மகாராஷ்ராவை மேற்கோள் காட்டிய அமைச்சர் தங்கமணி

Published On 2020-07-20 11:57 GMT   |   Update On 2020-07-20 11:57 GMT
தமிழ்நாட்டில் வீட்டு பயனீட்டாளர்கள் அனைவருக்கும் முதல் 100 யூனிட் இலவசமாக தரப்படுவதாக மின்சார கட்டண கணக்கீடு தொடர்பாக அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘‘ஒரு பக்கம் கொரோனா வாட்டி வதைக்கிறது. இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் வாட்டி வதைக்கிறார். கொரோனா தொற்று ஏற்பட்டா மக்கள் எந்தளவுக்கு அதிர்ச்சியும் மன வேதனையும் ஆளாவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து இருக்கும் மின்கட்டணத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

மின்கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. வீட்டில் முடங்கிய மக்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அபராதமா மின் கட்டணம்?. தமிழக அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணம் நியாயமானது அல்ல.

மக்களுக்கு சலுகை தர அரசுக்கு பணமில்லையா? மனமில்லையா?. மின் கட்டண வசூலில் மின் வாரியத்திற்கு லாபம். சாதாரண மக்களுக்கு மிகப் பெரிய சுமை. தவறான அடிப்படையில் மின் கணக்கீடு எடுத்துள்ளார்கள் என மக்கள் கூறுகின்றனர். கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மின்சார கட்டணத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை அளிக்காமல் கட்டணத்தை அதிகப்படுத்துவது ஏற்புடையதல்ல’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மு.க. ஸ்டாலினுக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார். அதில் ‘‘நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட மின் கட்டண கணக்கீட்டு முறையை குளறுபடி என்கிறார் ஸ்டாலின். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்கிறார் ஆர்.எஸ்.பாரதி. முரண்பட்ட கருத்துக்கள் தி.மு.க.வின் முரண்பாடான அரசியலை காட்டுகிறது.

அரசு வழங்கும் மின் சலுகைகளை மறைத்து பிற மாநிலங்களின் சிறிய சலுகைகளை கூறுவதா?. தமிழ்நாட்டில் தான் வீட்டு உபயோக மின் கட்டணம்  மிக மிக குறைவு’’ என்று தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் மின்சார கட்டணம்  கணக்கீடு தொடர்பாக அமைச்சர் தங்கமணி சில விளக்கங்களை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வீட்டு பயனிட்டாளர்கள் அனைவருக்கும் முதல் 100 யூனிட் இலவசமாக தரப்படுவதாக தெரிவித்த அமைச்சர், 300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் 500 ரூபாய் செலுத்தினால் போதும் எனவும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

 300 யூனிட் மின்சாரத்துக்கு கேரளாவில் ரூ.1,165ம், மகாராஷ்ராவில் ரூ.1,776ம் மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், கேரளா, மகாராஷ்ராவை மேற்கோள் காட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்கிறாரா?  என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.  

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் மின்சார ரீடிங்  எடுத்த முறையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மக்களை குழப்புகிறார் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர், தவறான அடிப்படையில்  கணக்கீடு, மின்சாரவாரியத்துக்கு லாபம் என அவர் கூறுவதில் உண்மையில்லை எனவும் தங்கமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மின்கட்டணத்துக்கு எதிராக திமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள நிலையில் அமைச்சர் தங்கமணி மின்கட்டண கணக்கீடு தொடர்பான விளக்கத்தினை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News