செய்திகள்
காதலன் வீட்டுமுன் இளம்பெண் தர்ணா போராட்டம் நடத்திய காட்சி

வேடசந்தூர் அருகே காதலன் வீட்டுமுன் இளம்பெண் தர்ணா

Published On 2020-07-15 11:12 GMT   |   Update On 2020-07-15 11:12 GMT
வேடசந்தூர் அருகே காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேடசந்தூர்:

கரூர் மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த பழனியாண்டி என்பவரின் மகள் ரேவதி (வயது 24) இவரும் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளனம்பட்டியை சேர்ந்த விக்ரமனும்(25) கரூரில் உள்ள தனியார் கல்லூரில் படித்தபோது காதலித்தனர். இந்த காதலுக்கு ரேவதியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. பின்னர் பட்டப்படிப்பை முடித்த ரேவதி திருச்சியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெண்கள் விடுதியில் இருந்து ரேவதியை விக்ரமன் அழைத்து வந்து வேடசந்தூர் அருகே உள்ள நாககோணானூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்தார். பின்னர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று நாககோணானூருக்கு விக்ரமன் வந்து தனது காதலியை சந்தித்து சென்றார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ரேவதியை சந்திக்க விக்ரமன் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரேவதி விக்ரமனின் செல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று மாலை ரேவதி வெள்ளனம்பட்டியில் உள்ள விக்ரமனின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை விக்ரமனுடன் சந்திக்க விடாமல் தாயார் தடுத்ததாகவும், விக்ரமனை வீட்டு சிறையில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இதை கண்டித்து ரேவதி காதலன் விக்ரமனின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தர்ணா போராட்டம் நடத்திய ரேவதியிடம் முறையாக புகார் செய்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். அதையொட்டி ரேவதி சமரசம் அடைந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News