செய்திகள்
சுற்றுலா வாகன டிரைவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

சுற்றுலா வாகன டிரைவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-15 10:19 GMT   |   Update On 2020-07-15 10:19 GMT
தர்மபுரி அருகே டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி சுற்றுலா வாகன டிரைவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:

அனைத்திந்திய சுற்றுலா வாகன டிரைவர்கள் நலச்சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். சுற்றுலா வாகன டிரைவர்கள் அண்ணா தொழிற்சங்க தர்மபுரி மாவட்ட தலைவர் சக்திவேல், செயலாளர் முன்னா, பொருளாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வேன் டிரைவர்கள் கருப்பு பட்டைகளை அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர். கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுள்ளதை கருத்தில் கொண்டு வாகனங்களுக்கான கடன் தவணைத்தொகைக்கான (இ.எம்.ஐ.) வட்டியை ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கு காலத்தில் உயர்ந்துள்ள டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு சுற்றுலா வாகனங்களுக்கான சாலைவரியை ரத்து செய்ய வேண்டும். டிரைவர்களுக்கு பேரிடர் கால நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். வாகன டிரைவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். வரி வசூலுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலஅளவு முடிந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா வேன் டிரைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News