செய்திகள்
கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-15 10:13 GMT   |   Update On 2020-07-15 10:13 GMT
அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தர்மபுரி, கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தர்மபுரி:

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசுத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் தோழமை சங்கங்களை சேர்ந்த காமராஜ், வெங்கடேசன், ஜகதாம்பிகா, மஞ்சுளா, முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். முடிவில், மாவட்ட பொருளாளர் தேவராஜன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசுத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய ஏற்ற முறையிலாக நியமனங்கள் மூலம் உடனடியாக நிரப்பிட வேண்டும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 வயதாக உயர்த்துவதை திரும்ப பெற வேண்டும். புதிய வேலை நியமன தடைச்சட்டத்தை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிககைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதேபோல், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத்தலைவர் இளவேனில் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராமஜெயம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் மலர்விழியிடம் மனு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News