செய்திகள்
போயஸ் கார்டன் இல்லம்

போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Published On 2020-07-15 08:57 GMT   |   Update On 2020-07-15 08:57 GMT
போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டது. இந்த இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்ற முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து சென்னை கலெக்டர் கட்டுப்பாட்டுக்குள் இந்த வீடு கொண்டு வரப்பட்டு வருவாய் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பான உயர்நீதிமன்ற கருத்தை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எந்த அவசரமும் காட்டவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் சொத்துக்களை கையகப்படுத்தவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும், கையகப்படுத்தும் நடைமுறையில் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் கூறியது.

இதனையடுத்து போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் நேரடி வாரிசுகள் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News