செய்திகள்
யானைகள் மர்ம மரணம்

தமிழக காடுகளில் யானைகள் மர்ம மரணம் - ஆராய நிபுணர் குழு அமைப்பு

Published On 2020-07-14 16:07 GMT   |   Update On 2020-07-14 16:07 GMT
தமிழக காடுகளில் யானைகளுக்கு இயற்கையற்ற மர்ம மரணங்கள் ஏற்படுவது பற்றி ஆராய நிபுணர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், வனத்துறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

யானைகளையும் அவற்றின் வசிப்பிடங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் கருதியும், அவைகளுக்கு ஏற்படும் இயற்கைக்கு உட்படாத மரணங்களை குறைப்பதற்கும், மனிதனுடன் ஏற்படும் மோதலை தடுப்பதற்கும், நிபுணர் குழுவை அமைத்து விரிவான ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வன உயிரினம்) சேகர்குமார் நிராஜ், உறுப்பினர் செயலாளராக மாவட்ட வன அதிகாரி எஸ்.ஆனந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர்களாக, யானைகள் தொடர்பான நிபுணர்கள் அஜய் தேசாய், சிவகணேசன், இந்தோ-அமெரிக்கன் சொசைட்டி நிர்வாகி, கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், பிரதீப், ஸ்ரீகுமார், மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த பூமிநாதன், நிதின்சேகர் உள்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் யானைகளின் நடமாட்டம், எண்ணிக்கை குறித்த அறிக்கையை இந்தக் குழு அளிக்கும். யானைகளுக்கும் மனிதனுக்கு ஏற்படும் மோதலுக்கான காரணம், மோதலை தவிர்க்க கூடிய வழிமுறைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும். யானைகளின் பிறப்பு, இறப்பு மற்றும் யானைகளின் எண்ணிக்கையை உயர்த்தகூடிய அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News