செய்திகள்
பொள்ளாச்சி சத்திரம் வீதியில் சப்-கலெக்டர் ஆய்வு

பொள்ளாச்சி சத்திரம் வீதியை மூடுவதற்கு சப்-கலெக்டர் உத்தரவு

Published On 2020-07-14 14:25 GMT   |   Update On 2020-07-14 15:18 GMT
முட்டை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து,பொள்ளாச்சி சத்திரம் வீதியை மூடுவதற்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்ற முட்டை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று பெங்களூரில் இருந்து கடந்த 8-ந்தேதி வஞ்சியாபுரம் அண்ணா நகருக்கு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வந்தார். அவரை வீட்டில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையில் அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும் சின்னாம்பாளையம் சோமசுந்தரம் லே-அவுட்டில் 55 வயது முதியவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து முட்டை வியாபாரி வசித்து வரும் அன்னபூரணி லே-அவுட் பகுதியில் நகராட்சி மூலம் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. மருந்தாளுனர் காமராசு பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார். இதற்கிடையில் அந்த வியாபாரி கடை நடத்தி வரும் சத்திரம் வீதியில் சப்-கலெக்டர் வைத்திநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தாசில்தார் தணிகவேல், நகராட்சி கமிஷனர் காந்திராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக அந்த பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு, கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இதுகுறித்து சப்-கலெக்டர் வைத்திநாதன் கூறியதாவது:-

சத்திரம் வீதியில் கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது கடையையொட்டி உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதிக்குள் பொதுமக்கள், வியாபாரிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் சுமார் 10 குடும்பங்கள் உள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மாற்று வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை நடத்தப்படுகிறது.

மேலும் சத்திரம் வீதியில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். தேவைப்படும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சத்திரம் வீதியை மூடுவதற்கும் உத்தர விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கிணத்துக்கடவு பேரூராட்சியில் உள்ள தினசரி காய் கறிசந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு மருத்துவ பரிசோதனைமுகாம் நடைபெற்றது. இதனை பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் தொடங்கிவைத்தார். இதில் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய டாக்டர் ராஜன் கலந்துகொண்டு வியாபாரிகள், விவசாயிகளுக்கு மருத்துவ பரிசோதனைமேற்கொண்டனர்.மேலும் கபசுரகுடிநீரும் வழங்கப்பட்டது. பின்னர் சப்-கலெக்டர் வைத்திநாதன் பேசும்போது, தினசரி காய் கறிசந்தைக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள்,அனைவரும் முககவசம் அணிந்து,சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என தீவிரமாக கண்காணிப்பது அவசியம். அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி மருந்து தெளித்து நோய் தடுப்புநடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கவேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். முகாமில் 120-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை,நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு ஸ்ரீதேவி, மண்டலதாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் ராமராஜ், கிராமநிர்வாக அலுவலர் மதுக்கண்ணன், வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிமணி, சுகாதார ஆய்வாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News