செய்திகள்
வீட்டின் முன்பு குவியல் குவியலாக கிடக்கும் மணலை காணலாம்

அழிக்காலில் கடல் சீற்றத்தால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள்

Published On 2020-07-14 10:35 GMT   |   Update On 2020-07-14 10:35 GMT
அழிக்காலில் கடல் சீற்றத்தால் எழுந்த ராட்சத அலை, மணலையும் வாரி இறைத்ததால் சில வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மீனவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ராஜாக்கமங்கலம்:

குமரி மாவட்டம் மிக நீளமான கடற்கரை பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். இந்த கடற்கரை பகுதிகளில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். இந்த மாதங்களில் பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி ஆக்ரோஷத்துடன் வருவது வழக்கம். அவ்வாறு வரும் அலைகள் கரையோரத்தில் உள்ள மீனவ மக்களின் வீடுகளுக்குள் புகுந்து விடுவதும் உண்டு.

இதில் வெள்ளிச்சந்தை அருகே உள்ள அழிக்கால் கிராமம் பெரும் சேதத்தை சந்திக்கிறது. இந்த மாதங்களில் அழிக்கால் கிராம மீனவர்கள் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். கடல்நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க தூண்டில் வளைவு கட்ட வேண்டும் என்று அழிக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழிக்காலில் கடல் சீற்றம் ஆக்ரோஷமாக இருந்தது. அப்போது திடீரென பல அடி உயரத்துக்கு ஒரு ராட்சத அலை எழுந்தது. இந்த அலை பயங்கர சத்தத்துடன் ஊருக்குள் புகுந்தது. கடல் நீர் கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

இந்த அலையின் ஆக்ரோஷம், தண்ணீரோடு கடற்கரை மணலையும் அள்ளிச் சென்றது. தண்ணீரும், மணலுமாக வீடுகளுக்குள் சென்றதால் அங்குள்ள மீனவர்கள் ஓட்டம் பிடித்தனர். எனினும் அவர்கள் தண்ணீரிலும், மணலிலும் சிக்கி அய்யோ, அம்மா என்று கூச்சலிட்டனர். இதேபோன்று தொடர்ந்து கடல் சீற்றமாக இருந்திருந்தால் மீனவர்களின் நிலைமை மோசமாகி இருக்கும். நல்ல வேளையாக சீற்றம் உடனடியாக தணிந்ததால் மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதே சமயத்தில் அலையின் சீற்றத்தால், குவியல், குவியலாக அள்ளி வரப்பட்ட மணல் வீடுகளுக்குள் புகுந்தது. அங்கு தொடர்ந்து மணல்கள் உள்ளேயே கிடக்கின்றன. ஒரு சில வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததை போன்று காட்சி அளிக்கிறது. அந்த அளவுக்கு கடல் சீற்றம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணல் குவியல், குவியலாக இருப்பதாலும், தொடர்ந்து அலையின் ஆக்ரோஷம் இருப்பதாலும் சுமார் 75 வீடுகளில் வசிக்கும் மீனவர்கள் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஏற்கனவே கொரோனா பீதியில் இருக்கும் நேரத்தில், கடல் சீற்றத்தால் அழிக்கால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் பணியில் ஈடுபட்டு மணல் குவியலை அகற்றி, மீனவர்களை சொந்த வீடுகளில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், இதற்கு நிரந்தர தீர்வான தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று உயிர் பயத்துடன் இருக்கும் மீனவர்கள் தங்களுடைய வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்.

மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், அழிக்கால் மீனவர்களை எந்தவொரு அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சில மாதங்கள் உயிர் பிழைப்போமோ, இல்லையா என காலையில் கண்விழித்த பிறகு தான் எங்களுக்கே தெரியும். அந்த அளவுக்கு அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

கடல் நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க தூண்டில் வளைவு தான் நிரந்தர தீர்வு என கோரிக்கை விடுத்தோம். தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கியாச்சு என்று கூறுகிறார்கள். ஆனால் பணி தான் நடந்தபாடில்லை. கண்ணாமூச்சி விளையாட்டாகத்தான் இருக்கிறது. பாதிப்பு ஏற்பட்டதும் அரசு அதிகாரிகளோ, அரசியல் கட்சி பிரமுகர்களோ எங்களை பார்த்து விட்டு செல்கிறார்கள், ஆறுதல் கூறுகிறார்கள், அதோடு நின்று விடுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை தான் தொடர்ந்தபாடில்லை.

தற்போது 75 வீடுகளில் வசிக்கும் மீனவர்கள் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மீண்டும் அவர்களுடைய வீட்டுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க, வீட்டு முன்பு மணல் மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர். ஒரு சில வீடுகளின் பாதியை மணல் மூடி விட்டது. இதனால் உடனடியாக அங்கு குவிந்துள்ள மணலை அகற்றி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயத்தில், கடல்நீர் புகாமல் இருக்க நிரந்தர தீர்வான தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
Tags:    

Similar News