செய்திகள்
முழு ஊரடங்கு

சேலத்தில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு - அனைத்து கடைகளும் அடைப்பு

Published On 2020-07-13 13:59 GMT   |   Update On 2020-07-13 13:59 GMT
சேலத்தில் நேற்று தளர்வு இல்லா முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது
சேலம்:

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகள், ஊராட்சிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள சிறு கடை முதல் பெரிய கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்பட அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி அனைத்து வீதிகள், தெருக்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்த்து தங்களது வீடுகளில் முடங்கினர். மேலும், காய்கறி சந்தைகள், வாரச்சந்தை, உழவர் சந்தைகள், மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள், இறைச்சி கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை, லீபஜார், பால் மார்க்கெட், கடைவீதி, சொர்ணபுரி, சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சாலைகளில் வாகனங்கள் செல்லவில்லை. சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம், 4 ரோடு, 5 ரோடு, சேலம் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடின.

முழு ஊரடங்கையொட்டி சேலம் மாநகரில் அத்தியாவசிய தேவைகளுக்கு இல்லாமல் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். முக்கியச் சாலைகள் தவிர பிற இணைப்புச் சாலைகள் முழுவதும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. அப்போது தேவையில்லாமல் வெளியே சென்றவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிந்த நபர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலம் மட்டுமின்றி ஓமலூர், தாரமங்கலம், மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், வாழப்பாடி, வீரபாண்டி, சங்ககிரி, நங்கவள்ளி, மேச்சேரி, கெங்கவல்லி, சங்ககிரி, ஏற்காடு உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தடையை மீறி கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று மூடப்பட்டன. இதனால் நேற்று முன்தினம் மாலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை முன்கூட்டியே கூடுதலாக வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் நேற்று வழக்கம்போல் செயல்பட்டது. இருந்தபோதிலும் குறைவான நபர்களே அம்மா உணவகங்களுக்கு வந்து உணவருந்தி சென்றதை காண முடிந்தது.

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார். இதனால் வரும் வாரங்களிலும் இதேபோல் முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News