செய்திகள்
தமிழக அரசு

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை - அரசு உத்தரவு

Published On 2020-07-13 12:00 GMT   |   Update On 2020-07-13 12:00 GMT
தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், சாவு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எந்தவித அறிகுறியும், வேறு எந்த நோய் தொற்று இல்லாதவர்களும் மருத்துவமனையில் சேர்ந்த ஒன்றிரண்டு நாட்களில் உயிரிழக்கும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.  இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக இறப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 31-ந்தேதி வரை  தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தெரிவித்துள்ளது.  முன்னதாக ஜூலை 15ம் தேதி வரை பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில்,  ஜூலை 31-ந்தேதி வரை போக்குவரத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டது.  

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.   மேலும் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

Similar News