செய்திகள்
உயிரிழந்த தந்தை-மகன்

சாத்தான்குளம் வழக்கு- காவலர்கள் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Published On 2020-07-13 07:07 GMT   |   Update On 2020-07-13 07:07 GMT
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி போலீசார் அழைத்து சென்று தாக்கினார்கள். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக 10 போலீசாரை கைது செய்தனர். மேலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, கோவில்பட்டி ஜெயிலில் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதன்படி, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடியினரால் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை நேற்று சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கைதான காவல் அதிகாரிகள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனு மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று மாலை 5 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான குழு சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாமில் சந்திப்பு நடைபெற்றது.

தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு ஆவணங்களில் உள்ள சந்தேகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

Similar News