செய்திகள்
முகாமில் ஒரு கால்நடைக்கு அமைச்சர் காமராஜ் குடற்புழு நீக்க மருந்துகொடுத்தார்

ஆலங்குடியில், கால்நடை மருத்துவ முகாம்- அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்

Published On 2020-07-12 10:24 GMT   |   Update On 2020-07-12 10:24 GMT
ஆலங்குடியில் கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
நன்னிலம்:

நன்னிலம் அருகே உள்ள ஆலங்குடியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தனபாலன் வரவேற்றார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்து வருகிறது. பால்வளத்தை பெருக்கும் நோக்கில் இலவச கறவை மாடு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டும் இலவச கறவை மாடுகள் வழங்க உள்ளோம் என்றார்.

பின்னர் அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறோம். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் எளிதில் கடன் பெற அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் எம்.பி. கோபால், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், துணைத்தலைவர் அன்பு, கூட்டுறவு சங்க தலைவர் ராம.குணசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றிய ஆணையர்கள் விஸ்வநாதன், பொற்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News