செய்திகள்
கைது

திருப்பூரில் ஜவுளிக்கடைக்காரர் வீட்டில் திருடிய 2 பேர் கைது - 30 பவுன் நகை, 3 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்

Published On 2020-07-12 09:45 GMT   |   Update On 2020-07-12 09:45 GMT
திருப்பூரில் ஜவுளிக்கடைக்காரர் வீட்டில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர்-தாராபுரம் ரோடு டி.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் அரவிந்த்குமார்(வயது 34). இவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த மாதம் 27-ந் தேதி மதியம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தாராபுரம் ரோட்டில் குருநாதம்பாளையத்தில் உள்ள தோட்டத்து பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகை, 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் திருட்டு நடந்த வீடு மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது அரவிந்த்குமார் வீட்டில், திருப்பூர் சந்திராபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் (38), விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை சேர்ந்த ஜெகன்(34) மற்றும் ஜோதிபாசு ஆகியோர் சேர்ந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமார், ஜெகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஜோதிபாசு தலைமறைவாக உள்ளார். கைதான 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அரவிந்த்குமார் வீட்டில் திருடிய நகையை வங்கியில் அடமானம் வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 30 பவுன்நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராஜ்குமார், ஜெகன் ஆகிய 2 பேரையும் நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஜோதிபாசுவை தேடி வருகிறார்கள். திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார். 
Tags:    

Similar News