திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகன்-சுரேஷ் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நக்கைடையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வந்தனர்.
அப்போது திருவாரூரை சேர்ந்த முருகன், அவரது அக்காள் மகன் சுரேஷ், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த கணேசன் உள்ளிட்ட கொள்ளை கும்பல் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டிலும், சுரேஷ் செங்கம் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர். அதன்பிறகு அவர்களை காவலில் எடுத்த போலீசார், தொடர் விசாரணை நடத்தி பதுக்கி வைத்திருந்த 25 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே முருகனை கைது செய்து, 162 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், கோட்டை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் முருகனுக்கு ஜாமீன் வழங்குவதாக திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1 உத்தரவிட்டது. இதையடுத்து விரிவான குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அப்போதைய இன்ஸ்பெக்டர் கோசலைராமன் உள்பட 25 பேரை சாட்சிகளாக கொண்டு முருகன், சுரேஷ் உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கோர்ட்டு விசாரணை எண்ணும் வழங்கப்பட்டு விட்டதாகவும், முருகன் உள்ளிட்டோரிடம் விரைவில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.