செய்திகள்
ராணுவவீரர் அழகுராஜாவின் உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுததை படத்தில் காணலாம்.

லடாக் எல்லையில் மரணமடைந்த தேனி ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

Published On 2020-07-12 06:45 GMT   |   Update On 2020-07-12 06:45 GMT
லடாக் எல்லையில் மரணமடைந்த தேனி ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சின்னமனூர்:

தேனி மாவட்டம் குச்சனூர் அருகே உள்ள துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 43). இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரெஜிமெண்ட்டில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், வர்ஷனா என்ற மகளும், தேஜஸ் என்ற மகனும் உள்ளனர்.

அழகுராஜா கடந்த 9-ந்தேதி புவனேஸ்வரில் இருந்து ராணுவ தளவாடங்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு லடாக் எல்லைக்கு புறப்பட்டார். வழியில் ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் சுட்டுபாலு என்ற இடத்தில் மலைப்பாதையில் வந்தபோது பாறையில் வாகனம் மோதி விபத்தில் சிக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அவரது உடல், கோவைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் நேற்று அதிகாலை சொந்த ஊரான துரைசாமிபுரத்துக்கு கொண்டுவரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



அப்போது அவரது உடலை பார்த்து மனைவி, மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் துரைசாமிபுரம், குச்சனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் திரண்டு வந்து அழகுராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் துரைசாமிபுரத்தில் உள்ள மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழகுராஜா உடலுக்கு உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்.

இதையடுத்து ராணுவ மரியாதையுடன் அழகுராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அழகுராஜாவின் உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசியகொடி ராணுவவீரர்களால் மடிக்கப்பட்டு அவரது மனைவி ராணி, மகள் வர்ஷனா, மகன் தேஜஸ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. இந்த சமயத்தில் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் அழகுராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ராணுவவீரர் விபத்தில் பலியானது துரைசாமிபுரம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
Tags:    

Similar News