செய்திகள்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் கொரோனா தோசை, முககவச புரோட்டா

விழிப்புணர்வு ஏற்படுத்தும் கொரோனா தோசை, முககவச புரோட்டா

Published On 2020-07-12 06:23 GMT   |   Update On 2020-07-12 06:23 GMT
தூத்துக்குடியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தோசை, முககவச புரோட்டா விற்பனை அமோகமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
தூத்துக்குடி:

கொரோனா வைரஸ் ஒவ்வொரு துறையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் காரணமாக மக்கள் பொது இடங்களில் ஒருவித அச்ச உணர்வோடு நடமாடி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆனாலும் பலர் முககவசம் இன்றி சுற்றித்திரிகின்றனர்.

இதனால் பலரும் ஒவ்வொரு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஜவுளிக்கடைகளில் உள்ள பொம்மைகளுக்கு முககவசம் அணிவிக்கப்படுகிறது. விளம்பர பலகைகளில் உள்ள பொம்மைகளுக்கு முககவசம் அணிவித்தல் என்று மக்கள் தாமாக முன்வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலிலும் உணவு மூலம் நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு கொரோனா தோசை, முககவசம் புரோட்டா விற்பனை செய்யப்படுகிறது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுவதால் விற்பனையும் அமோகமாக நடக்கிறது.

இதுகுறித்து ஓட்டல் மேலாளர் கோவிந்தராஜன் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு துறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உணவுத்துறையில் எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று யோசித்தோம். இதனால் கொரோனா தோசையும், முககவசம் புரோட்டாவும் பிறந்தது. ஒரு புரோட்டா ரூ.25-க்கு விற்பனை செய்து வருகிறோம். இதனை முககவசம் விலைக்கே (ரூ.10) கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த தோசை மற்றும் புரோட்டாவை மக்கள் சாப்பிடும்போது, அவர்களிடம் தானாகவே கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும். அதோடு உணவே மருந்தாக அமையும் வகையில் கரிசலாங்கன்னி துவையல், பூண்டு தோசை, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி, எள் துவையல் வழங்கி வருகிறோம். நம் பாரம்பரிய உணவை மீறக்கூடாது. அதுவே நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. அதனை மக்கள் பயன்படுத்தினாலே நோய் தொற்று வராது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News