செய்திகள்
தினேஷ்குமாரின் பெற்றோர் பிரபு, சுபத்ரா, தினேஷ்குமார்

விகாஸ் துபே என்கவுண்ட்டர்: தமிழகத்துக்கும், சொந்த கிராமத்துக்கும் பெருமை - போலீஸ் அதிகாரியின் பெற்றோர் பெருமிதம்

Published On 2020-07-12 06:13 GMT   |   Update On 2020-07-12 06:13 GMT
பிரபல ரவுடி விகாஸ் துபேவை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றது சேலத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஆவார். அவரது சாதனை தமிழகத்துக்கும், சொந்த கிராமத்துக்கும் பெருமை என்று அவரது பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொளத்தூர்:

பிரபல ரவுடி விகாஸ் துபேவை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றது சேலத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஆவார். அவரது சாதனை தமிழகத்துக்கும், சொந்த கிராமத்துக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது என்று அவரது பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே. இவரை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது விகாஸ் துபே தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்றான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



மேலும் தப்பி ஓடிய விகாஸ் துபேவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவனை கைது செய்து அழைத்து வந்த கார் விபத்தில் சிக்கியது. இதனால் விகாஸ் துபே போலீசாரை தாக்கி விட்டு, தப்பி ஓட முயன்றான். அவனை சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.எஸ்.பி.) தினேஷ் குமார் தலைமையிலான போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

இந்த என்கவுண்ட்டருக்கு தலைமை தாங்கிய, சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே மலையடிவாரத்தில் உள்ள லக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னதண்டா ஆகும். இவரது தந்தை பிரபு (வயது 63), விவசாயி. தாயார் சுபத்ரா (54). இவர்களது ஒரே மகன் தான் தினேஷ்குமார் (34).

இவர் பள்ளி படிப்பை மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளி, சேலம் வித்யா மந்திர், ஈங்கூர் கங்கா மெட்ரிக் பள்ளிகளில் முடித்தார். பின்னர் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்தார். தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார்.

2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற அவர், கான்பூர் மாவட்ட சிறப்பு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இவருக்கு திருமணமாகி ரம்யா (29) என்ற மனைவியும், அனுஷ் கார்த்திக் (2) என்ற மகனும் உள்ளனர்.

இது குறித்து தினேஷ்குமாரின் தந்தை பிரபு கூறியதாவது:-

எனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து, மகனை படிக்க வைத்தேன். எங்களது கிராமத்துக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், எனது மகன் தொடர்ந்து விடுதியில் தங்கி படித்தான். எதிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பான். போலீஸ் பதவி என்னுடைய நேர்மையை மேலும் உயர்த்தும் என்று எங்களிடம் அடிக்கடி கூறுவான். பிரபல ரவுடியை அவன் சுட்டுக்கொன்றது தமிழகத்துக்கும், இந்த கிராமத்துக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தாயார் சுபத்ரா கூறும் போது, எனக்கு ஒரே மகன். சவாலான போலீஸ் துறை பணி என்பதால் எங்களை வந்து பார்ப்பதற்கு கூட நேரம் கிடைப்பது இல்லை. விடுமுறையில் இங்கு வந்தால் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். எப்போதும் சவாலான வேலைகளை கையில் எடுக்கும் பணி அவனுக்கு சிறுவயது முதலே இருந்தது. தற்போது இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு பிரபல ரவுடியை சுட்டு வீழ்த்தி உள்ளான். அவனது சாதனையை பலரும் பாராட்டும் போது எனது மனம் பூரிப்பாகிறது என்றார்.
Tags:    

Similar News