செய்திகள்
கட்டிட தொழிலாளர்களுக்கு போலீசார் உதவி

மணப்பாறையில் இருந்து தேனிக்கு நடந்து சென்ற கட்டிட தொழிலாளர்களுக்கு போலீசார் உதவி

Published On 2020-07-11 16:03 GMT   |   Update On 2020-07-11 16:03 GMT
ஊதியம் தர மறத்த நிலையில் மணப்பாறையில் இருந்து தேனிக்கு நடந்து சென்ற கட்டிட தொழிலாளர்களுக்கு போலீசார் உதவி செய்து லாரி ஒன்றில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
மணப்பாறை:

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டியை சேர்ந்த 11 கட்டிட தொழிலாளர்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் தனியார் ஒருவரிடம் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர். ஒரு வாரம் வேலை பார்த்த அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டதற்கு அந்த ஒப்பந்ததாரர் தர மறுத்ததாக தெரிகிறது. இதனால், வேதனை அடைந்த அவர்கள் கையில் பணம் இல்லாததாலும், ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாததாலும் 11 பேரும் நேற்று மொண்டிப்பட்டியில் இருந்து தேனிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

அவர்கள் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு அருகே வந்தபோது நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் நடந்த விவரத்தை போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் மீது பரிதாபப்பட்ட போலீசார் அருகே உள்ள ஒரு பேக்கரிக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு டீ மற்றும் பிஸ்கட் வாங்கிக் கொடுத்து விராலிமலையில் இருந்து தேனிக்கு செல்லும் லாரி ஒன்றில் ஏற்றி அனுப்பி வைத்தனர். போலீசாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Tags:    

Similar News