செய்திகள்
காவேரி கூக்குரல் திட்டத்திற்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகள்

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் நடப்பாண்டில் 1.10 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்

Published On 2020-07-11 10:10 GMT   |   Update On 2020-07-11 10:10 GMT
நதிகள் மீட்பு இயக்கத்தின் ஒரு அங்கமாக இயங்கும் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் மொத்தம் ஒரு கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை:

நதிகள் மீட்பு இயக்கத்தின் நிர்வாக குழுக் கூட்டம் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘காவேரி கூக்குரல்’ திட்டம், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘வஹாரி’ நதி புத்துயிரூட்டும் திட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன்படி, கர்நாடக மாநில அரசு ‘க்ருஷி ஆரண்ய பிரோட்ஷஹா யோஜனே’ (Krushi Aranya Protsaha Yojane) என்ற திட்டத்தின் கீழ் 70 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து தர உள்ளது. இதற்காக, காவேரி கூக்குரல் குழுவினர் அம்மாநிலத்தில் காவேரி படுகையில் அமைந்துள்ள 9 மாவட்டங்களில் இருக்கும் 54 தாலுகாக்களில் அம்மாநில வனத் துறையுடன் இணைந்து களப் பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் 480 காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்களும், மாவட்ட ஆட்சியர்கள், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், வனப் பாதுகாவலர்கள், வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர்கள் மற்றும் தாலுகா அதிகாரிகள் உட்பட 270 அரசு அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, ஈஷாவின் 36 மஹாத்மா பசுமை இந்தியா திட்ட நர்சரிகள் மூலம் 40 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளின் பங்களிப்போடு அவர்களின் நிலங்களில் நடப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு நிறைந்த சூழலிலும் மரக்கன்று உற்பத்தி செய்யும் பணிகள் தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதேபோல், மஹாராஷ்ட்ரா மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் ‘வஹாரி’ நதி புத்துயிரூட்டும் பணியில் 40 கிராமங்களில் ஈஷா தன்னார்வலர்கள் களப் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிர்வாக குழு கூட்டத்தில் நதிகள் மீட்பு இயக்கத்தின் நிர்வாக குழுத் தலைவர் யூரி ஜெயின், உறுப்பினர்களாக இருக்கும்  பர்வேஷ் சர்மா (மத்திய பிரதேச வேளாண் துறையின் முன்னாள் செயலாளர்), பயோகான் நிறுவனத்தின் செயல் தலைவர் கிரண் மசூம்தார், சர்வதேச வன நிதியத்தின் இந்தியாவுக்கான செயலாளர்  ரவி சிங், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிஜித் பஸாய்த், இஸ்ரோ முன்னாள் தலைவர்  ஏ.எஸ்.கிரண் குமார், மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர்  சசி சேகர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்  முத்துராமன், இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவர்  சந்திரஜித் பானர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News