செய்திகள்
கொரோனா வைரஸ்

ஏற்காட்டுக்கு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை

Published On 2020-07-10 11:14 GMT   |   Update On 2020-07-10 11:14 GMT
சேலத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் ஏற்காடு செல்லும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:

சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சேலத்துக்கு வருபவர்களால் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் குகை பகுதியில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர் மூலம் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா நோய் தொற்று உள்ள இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டிற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு வாகனங்களில் செல்லும் நபர்களை அடிவாரத்திலேயே போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி இ-பாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் ஏற்காடு செல்லும் நபர்களின் உடல் வெப்ப நிலையையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. ஏற்காட்டுக்கு எதற்காக செல்கிறீர்கள்? வெளி மாவட்டங்களில் இருந்து வருகிறீர்களா? இ-பாஸ் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்களது ஆவணங்களில் குறித்து வைத்துள்ளனர். அதேசமயம் இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத நபர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
Tags:    

Similar News