செய்திகள்
தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ்

முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் அபராதம் வசூல்- கலெக்டர் கோவிந்தராவ்

Published On 2020-07-10 10:04 GMT   |   Update On 2020-07-10 10:04 GMT
தஞ்சை மாவட்டத்தில் முக கவசம் அணியாத நபர்களிடமிருந்து ரூ.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கூறி உள்ளளர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோயை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருப்பதை கண்காணிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பறக்கும் படைகளை சேர்ந்த அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களிடம் இருந்து ரூ.100 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி, தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணியாத காரணத்திற்காக 3 ஆயிரத்து 14 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 600-ம், கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 573 நபர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 300-ம், பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 444 நபர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 200-ம் வசூலிக்கப்பட்டுள்ளது.

22 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 458 நபர்களிடமிருந்து ரூ.7 லட்சத்து 8 ஆயிரத்து 250-ம், 589 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 417 பேரிடம் இருந்து ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்து 700-ம் வசூலிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படைகளின் மூலம் 1,040 பேரிடமிருந்து ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 700-ம் என மொத்தம் 24 ஆயிரத்து 946 பேரிடமிருந்து ரூ.25 லட்சத்து 14 ஆயிரம் இதுவரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், வணிக நிறுவனங்களில் கிருமிநாசினி மற்றும் கைகழுவும் அமைப்பு ஏற்படுத்துதல் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News