செய்திகள்
கோப்புபடம்

பிளஸ்-2 மாணவர்கள் 1,107 பேருக்கு 27-ந்தேதி மறுத்தேர்வு

Published On 2020-07-10 08:03 GMT   |   Update On 2020-07-10 08:03 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கால் இறுதிநாள் தேர்வை எழுதாத பிளஸ்-2 மாணவர்கள் 1,107 பேருக்கு 27-ந்தேதி மறுத்தேர்வு நடைபெற உள்ளது.
திண்டுக்கல்:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி, 24-ந்தேதி வரை நடைபெற்றது. இறுதிநாளில் வேதியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் இறுதித்தேர்வை பல மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது. அதேநேரம் பிளஸ்-2 விடைத்தாள் அனைத்தும் திருத்தப்பட்டு விட்டன. ஆனால், இறுதிநாளில் பல மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பதால், பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இறுதிநாளில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வருகிற 27-ந்தேதி மறுத்தேர்வு நடைபெற இருக்கிறது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 20 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 85 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால், இறுதித்தேர்வை 1,107 மாணவ-மாணவிகள் எழுதவில்லை. இவர்கள் அனைவரும் வருகிற 27-ந்தேதி மீண்டும் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 205 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. பழைய பாடத்திட்டத்தில் 30 பேரும், புதிய பாடத்திட்டத்தில் 1,077 பேரும் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு வருகிற 13-ந்தேதி முதல் அந்தந்த பள்ளிகள் மூலம் ஹால்டிக்கெட் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
Tags:    

Similar News