செய்திகள்
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா (கோப்புப்படம்)

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை

Published On 2020-07-10 07:44 GMT   |   Update On 2020-07-10 07:44 GMT
கொரோனா தாக்கம் எதிரொலியாக இந்த ஆண்டு ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தர்காவுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அனைத்து மத பக்தர்களும் வருகை தந்து ஆன்மிக சிகிச்சை பெற்றுச்செல்வது வழக்கம். இங்கு நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு 846-வது சந்தனக்கூடு திருவிழா கடந்த 2-ந்தேதி மவுலீதுடன் தொடங்கியது. இந்த மவுலீது ஓதும் நிகழ்ச்சியில் தர்கா ஹக்தார்கள் மட்டும் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், கொரோனாவில் இருந்து உலக மக்கள் விடுபடவும் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக சந்தனக்கூடு ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அன்றைய தினம் அதிகாலை தர்காவில் உள்ள மக்பாராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி எளிமையாக நடைபெறும். ஊரடங்கை முன்னிட்டு யாத்ரீகர்கள் யாரும் தர்காவுக்குள் வர அனுமதி கிடையாது என்று தர்கா ஹக்தார் கமிட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News