செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர் பாதிப்பு

Published On 2020-07-09 15:03 GMT   |   Update On 2020-07-09 15:03 GMT
தூத்தூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 2 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
நித்திரவிளை:

தூத்தூர் மீனவ கிராமத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 16 போலீசாருக்கு தூத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் நேற்று 44 வயது போலீஸ்காரர், 28 வயது சிறப்பு படை போலீஸ்காரர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் பணியாற்றிய நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்து தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தூத்தூர் கிராமத்தில் இதுவரை 101 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று வரை 80 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நித்திரவிளை அருகே கோயிக்கத்தோப்பு பகுதியை சேர்ந்த 47 வயது ஆணுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அந்த நபரின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வாவறை பஞ்சாயத்து தலைவி மெற்றில்டா, முன்சிறை வட்டார தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்க பிரேமா ஆகியோர் தலைமையில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத கர்ப்பிணிக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குலசேகரம் பகுதியில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

கொல்லங்கோடு அருகே நீரோடிகாலனி மீனவ கிராமத்தை சேர்ந்த 35 வயது உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மேலும், சிலுவைபுரம் விராலிவிளை பகுதியை சேர்ந்த 35 வயது கொத்தனார், அவரது 26 வயது மனைவி, 5 வயது குழந்தை ஆகியோருக்கும் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சுகாதார துறையினர் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tags:    

Similar News