செய்திகள்
அகதிகள் முகாமில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

களியக்காவிளை அருகே அகதிகள் முகாமில் மேலும் 14 பேர் பாதிப்பு

Published On 2020-07-09 13:43 GMT   |   Update On 2020-07-09 13:43 GMT
களியக்காவிளை அருகே உள்ள அகதிகள் முகாமில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
களியக்காவிளை:

குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. களியக்காவிளை அருகே கோழிவிளையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 2 நாட்களுக்கு முன் 47 வயது ஆண், அவருடைய மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த முகாமில் உள்ள 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை நடந்தது. அவர்கள் அனைவரையும் சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

நேற்று காலை பரிசோதனை முடிவு வந்தது. அதில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் அகதிகள் முகாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. அகதிகள் முகாமில் உள்ள ஆண்கள் பலரும் களியக்காவிளை மீன் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக உள்ளதால், தனிமைப்படுத்தப்பட்ட பலரும் சுவர் ஏறி குதித்து மது வாங்க செல்வதாக முகாமை சுற்றியுள்ளவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோழிவிளை அகதிகள் முகாமுக்கு கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகரன், வருவாய் ஆய்வாளர் பரந்தாமன், மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சத்தியநேசன், விஜீ, அஜின், முன்சிறை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா ஆகியோர் சென்று பார்வையிட்டு, கிருமி நாசினி தெளித்தும், பிளச்சிங் பவுடர் தூவியும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

இதுதவிர கணியன்விளை பகுதியை சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கும், 45 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News