செய்திகள்
அம்பை தாலுகா அலுவலகத்தில் நகராட்சி ஊழியர் ஒருவர் கிருமி நாசினி தெளித்தபோது எடுத்த படம்.

அதிகாரிகளுக்கு கொரோனா: அம்பை தாலுகா- வனத்துறை அலுவலகம் மூடப்பட்டது

Published On 2020-07-09 10:20 GMT   |   Update On 2020-07-09 10:20 GMT
அம்பையில் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையொட்டி தாலுகா மற்றும் வனத்துறை அலுவலகங்கள் மூடப்பட்டது. மேலும் நேற்று மதியம் முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
அம்பை:

அம்பை தாசில்தாராக பணியாற்றும் 50 வயதுடைய நபர் நெல்லையில் இருந்து அம்பை வந்து செல்கிறார். அவருக்கும், அம்பை மெயின் ரோட்டில் உள்ள வனத்துறை முகாம் அலுவலகத்தில் தங்கியுள்ள வனத்துறை உயர் அதிகாரி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து 2 அலுவலகங்களும் மூடப்பட்டு நகராட்சி நிர்வாகத்தால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் 3 நாட்களுக்கு அலுவலகம் செயல்படாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம், இ-சேவை மையம், அரசு அலுவல் பிரிவு அலுவலகம் ஆகியவை மூடப்பட்டது. ஏற்கனவே அரசு ஆஸ்பத்திரியில் 4 பேருக்கு தொற்று உள்ள நிலையில் ஆஸ்பத்திரியும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அம்பையில் நேற்று மதியம் முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை கடைகள் அடைக்கப்படுகிறது. இதேபோல் வைராவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 35 வயதுடைய மருத்துவ செவிலியருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாநகரில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், டவுன் போஸ் மார்க்கெட், நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக பல்வேறு இடங்களில் தற்காலிக மார்க்கெட்டுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாளையங்கோட்டை தியாகராஜ நகர், மகாராஜ நகர் பகுதியில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதையடுத்து அங்குள்ள தற்காலிக மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நேற்று ஒரு நாள் 3 தற்காலிக மார்க்கெட்டுகள் மூடப்பட்டன.

உழவர் சந்தை அருகில் 2 மார்க்கெட்டுகளும், ஜெயேந்திரா பள்ளி முன்பு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டும் மூடப்பட்டது. பின்னர் அங்குள்ள காய்கறிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அங்கு கிருமி நாசினி தெளித்து, பிளச்சிங் பவுடரும் தூவப்பட்டது.

Tags:    

Similar News