செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி - பாதிப்பு எண்ணிக்கை 544 ஆக உயர்வு

Published On 2020-07-09 09:36 GMT   |   Update On 2020-07-09 09:36 GMT
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று மேலும் ஒருவர் பலியானார். நேற்று மட்டும் 15 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 544 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று மேலும் 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் தஞ்சையை சேர்ந்த 5 பேரும், கும்பகோணத்தை சேர்ந்த 7 பேரும், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, பாபநாசம் பகுதியை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். இவர்களில், கும்பகோணத்தை சேர்ந்த 6 வயது சிறுமியும் அடங்குவார்.

இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 544 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்ற 15 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்.

தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் மதுரைக்கு சென்று வந்ததையடுத்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த மற்ற ஊழியர்கள் 10 பேருக்கும் கொரோனா பரவி உள்ளது.

இதையடுத்து அவர்கள் அந்த மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 55 வயது நபருக்கு தீவிர காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை கடந்த 1-ந் தேதி செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது 3-ந் தேதி தெரிய வந்தது.

இதையடுத்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4-ந் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இவருக்கு யார் மூலம், எப்படி கொரோனா தொற்று பரவியது என்பது கண்டறிய முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News