செய்திகள்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

மத்திய குழு சென்னை வந்தது- சுகாதாரத்துறை அமைச்சருடன் இன்று ஆலோசனை

Published On 2020-07-09 01:49 GMT   |   Update On 2020-07-09 01:49 GMT
பெங்களூரு மற்றும் டெல்லியில் இருந்து மத்திய குழு சென்னை வந்தது. இன்று சுகாதாரத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
ஆலந்தூர்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2-வது மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை 3-வது முறையாக மத்திய அரசு அனுப்பி உள்ளது. முதல் குழு கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், அதன்பின்னர் 2-வது குழுவும் சென்னையில் ஆய்வு செய்தது.

தற்போது 3-வது முறையாக மத்திய குழு நேற்று தமிழகம் வந்தது. இந்த குழுவில் மத்திய அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர்த்தி அகுஜா தலைமையில் சுபோத் யாதவா மற்றும் மத்திய அரசு துறையில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு இடம் பெற்று உள்ளனர். 2 மருத்துவ நிபுணர்களும் உள்ளனர்.

அதன்படி பெங்களூருவில் இருந்து மத்திய குழு தலைவரான மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா வந்தார். அவருடன் மின்னணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரா வந்தார். இவர்கள் சென்னை வந்த உடன், ஆய்வு செய்வதற்காக செங்கல்பட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

அதேபோல் மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய அரசு இணை செயலாளர்கள் ராஜேந்திர ரத்னு, சுஹாஸ் தந்துரு ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். இந்த குழுவினருடன் மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர் டாக்டர் பிரவீன், ஜிப்மர் டாக்டர்கள் சுவரூப் சாகு, சதீஷ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

3 நாள் பயணமாக வந்துள்ள இந்த குழு இன்று காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கின்றனர்.

பின்னர் சென்னை மாநகராட்சியில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு செய்கின்றனர். அதன் பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கின்றனர். அங்கு ஓய்வு எடுத்துவிட்டு பகல் 2.30 மணிக்கு சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்படும் பரிசோதனை மையங்களை பார்வையிடுகின்றனர். மாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணி வரை கிண்டி கிங் நிலையத்தில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை பார்வையிடுகின்றனர்.

மாலை 4.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள சிறப்பு மையத்தை ஆய்வு செய்கின்றனர். பின்னர் புளியந்தோப்பு பகுதிக்கு செல்கின்றனர். அங்கிருந்து எழும்பூர் மருத்துவ அலுவலகத்தில் மருந்துகள் இருப்பு குறித்து ஆலோசனை செய்கின்றனர்.
Tags:    

Similar News