செய்திகள்
தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி

80 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று- கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

Published On 2020-07-08 15:22 GMT   |   Update On 2020-07-08 15:22 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

தமிழக அரசு உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 300 மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 1,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 401 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினந்தோறும் 40 முதல் 50 பேர் வரை பூரண குணம் பெற்று வீடு திரும்புகிறார்கள். தினமும் சளி, இருமல், காய்ச்சல், தும்மல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் சுமார் 50 முதல் 100 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. இதில் கொரோனா தொற்று உறுதியானால், அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திரேஸ்புரம் பகுதியில் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், திரேஸ்புரம் தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மாநகராட்சி மூலம் வீடு, வீடாக சென்று தெர்மல் ஸ்கேனிங் மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதேபோன்று விளாத்திக்குளம், கோவில்பட்டி, காயல்பட்டணம் நகராட்சி பகுதியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டு, மேலும் நோய் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வெளியில் வரும்போது முககவசங்களை அணிய வேண்டும். முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் பொதுமக்கள் அதிகமாக பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் சிகிச்சையகங்கள் ஆகியவற்றுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருகை தரும் நபர்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டள்ளது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 600 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் தாலுகா அளவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதில் கோவில்பட்டி தாலுகாவில் 150 படுக்கைகள் தற்போது உள்ளது. மேலும் கூடுதலாக 100 படுக்கைகள் தயார் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள ஆஸ்பத்திரியிலும் தேவையான படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 80 சதவீதம் பேருக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்படுகிறது. இதுபோன்ற நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக அனைத்து தாலுகாவிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விளாத்திகுளம் பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொற்று ஏற்பட்டதால், சந்தைப்பகுதி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் நவீன கருவிகள் செயல்பாட்டுக்கு வந்து உள்ளன. இதனால் ஏற்கனவே தினமும் 500 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 1200 ஆக அதிகரித்து உள்ளது.

கோவில்பட்டி பகுதியில் தனியார் கல்லூரியும், எட்டயபுரம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரிகள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களாக மாற்றப்பட்டு சுமார் 400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் உள்ள நபர்களின் உடல் வெப்ப நிலை மற்றும் ஆக்சிஜன் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 7 இடங்களிலும், கோவில்பட்டி நகராட்சி பகுதியில் 3 இடங்களிலும் கொரோனா தொற்று காய்ச்சல் பரிசோதனை மையம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு விரைவாக காய்ச்சல் பரிசோதனை செய்து கொரோனா தொற்று உள்ள நபர்களை எளிதாக கண்டறிய முடிகிறது. பொதுமக்கள் சளி, காய்ச்சல், இரும்பல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமாதப்படுதாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் பயண விவரங்கள் அல்லது திருமணம், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது போன்ற விவரங்கள் கண்டறியப்படுவதால் சமூக பரவல் இல்லை.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
Tags:    

Similar News